இளம் பெண்களுக்கு தற்போது இருக்கின்ற சமுதாயத்தில் தன்னுடைய சொந்த வீட்டை தவிர்த்து வேறு எங்குமே பாதுகாப்பு கிடைப்பதில்லை. பெற்றோர்கள் நம்பிக்கையுடன் அவர்களை அனுப்புவது பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தான். ஆனால் அங்கேயும் ஒரு சில நபர்கள் செய்யும் செயலால் மாணவிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறார்கள்.
அந்த வகையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக காவல்துறையில் புகார் வழங்கியிருக்கிறார். இதை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாமை நேற்று கைது செய்தனர்.
முதல்வர் ஆபிரகாம் தொந்தரவு வழங்கியதால் பாதிக்கப்பட்ட 23 வயது மாணவி கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் தேதி சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். இந்த புகாரை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வந்த காவல்துறை அதிகாரிகள் நேற்று மதியம் 3 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் இருக்கும் கல்லூரி முதல்வர் ஆபிரகாமின் இல்லத்திற்கு சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர்.