பொதுவாக முதியோர்கள், ஆதரவற்றோர்கள் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் தருவதற்கு பல்வேறு ஆதரவு இல்லங்கள் இருக்கின்றனர்.ஆனாலும் அதையும் மீறி பலர் எந்தவித ஆதரவும் இல்லாமல், சரியான சாப்பாடு இல்லாமல் இன்னமும் தெருக்களில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்படி ஆதரவில்லாமல் தெருக்களில் சுற்றும் நபர்களை கண்டறிந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் அவர்களை முதியோர் ஆதரவு இல்லங்களில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
அந்த வகையில், திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (60).மத்திய அரசு நிறுவனமான திருச்சி ஆல் இந்தியா ரேடியோ நிலையத்தில் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
அதன் பிறகு சில வருடங்களுக்கு முன்னர் அவர் விருப்ப ஓய்வு பெற்று தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்திருக்கிறார்.திடீரென்று அவருடைய மனைவி உயிரிழந்து விடவே, சிறிது காலம் திருமணமான தன்னுடைய மகளின் வீட்டில் வசித்து வந்தார்.
சென்ற சில மாதங்களுக்கும் முன்னர் மகளின் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், ஸ்ரீரங்கம் கிழக்கு சித்திரை வீதி பகுதியில் ஆலயங்களில் அன்னதானம் வாங்கி சாப்பிட்டு விட்டு கடை வராண்டாவில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே கடை வராண்டாவில் வேறு சிலரும் இரவு சமயங்களில் படுத்து உறங்குவார்கள் என்றும் தெரிகிறது.
இந்த சூழ்நிலையில்தான் இந்த பகுதியில் உள்ள கடை வராண்டாவில் படுத்து உறங்குவதற்கு ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த முருகேசன் (39) என்ற நபர் கட்டிட வேலைக்கு சென்று விட்டு வந்தார்.
அப்போது அவருக்கும் கந்தசாமிக்கும் இடையே இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு முடிவில் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த முருகேசன் அந்த பகுதியில் நடந்த சிமெண்ட் காங்கிரீட் கல்லை தூக்கி கந்தசாமியின் தலையில் அடித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்தால் மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் கந்தசாமி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அதன் பிறகு முருகேசன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு தப்பிச்சென்ற முருகேசனை கைது செய்த காவல்துறையினர் விசாரித்ததில் கடை வராண்டாவில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாகத்தான் இந்த கொலை நடந்திருக்கிறது என்ற விவரம் தெரிய வந்தது.