கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 39 வயதான இவர் திருமண வரன் வேண்டி தன்னுடைய பெயரை இணையதளத்தில் பதிவு செய்திருந்தார்.
15 நாட்களுக்கு முன்னர் அன்ஷூல் ஜெயின் என்ற பெயரில் டெல்லியில் இருந்து இளைஞர் ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார். டெல்லியில் நடைபெற உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சியில் பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று தெரிவித்து அந்த பெண்ணை அழைத்துள்ளார்.
அவர் கூறியதை நம்பிய அந்த பெண், டெல்லிக்கு நகைகளுடன் திருமணத்திற்கு சென்றுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அந்த பெண்ணை வரவேற்று காரில் அழைத்துச் சென்ற இளைஞன் போனவுடன் அந்த பெண்ணிடம் கார் டயரில் ஏதோ பிரச்சனை இருப்பதைப் போல தெரிகிறது என்று கூறியிருக்கிறார். அந்த பெண்ணும் கீழே இறங்கி கார் டயரை பரிசோதிக்க முயற்சி செய்தபோது காருடன் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் வழங்கினார். அதில் 300 கிராம் எடையுள்ள தங்க நகைகள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கைபேசி, ஆடைகள், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை அந்த நபர் ஏமாற்றி எடுத்துச் சென்று விட்டதாக கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.