திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் இருக்கக்கூடிய அகஸ்தியபுரம் அருகே உள்ள காரைக்குடியைச் சார்ந்தவர் தனபால் இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமாக நிலம் இருந்தது. அந்த நிலத்தை ராஜாக்கண்ணு மற்றும் கருப்பையா உள்ளிட்டோருக்கு 4 வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்திருக்கிறார்.
சித்தரவு அருகே இருக்கின்ற நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா சின்னத்திரை நடிகர் ஆவார். ராஜக்கண்ணு மற்றும் கருப்பையா உள்ளிட்டோர் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழிலை இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தனபாலின் 5 ஏக்கர் இடத்தை சில நாட்களுக்கு முன்னர் நில அளவையாளர்கள் உதவியுடன் அளவெடுக்கும் போது 4½ ஏக்கர் நிலம் மட்டுமே இருந்திருக்கிறது. அரை ஏக்கர் நிலம் இல்லாததை அறிந்து கொண்ட கருப்பையா தன்னை தனபால் 5 ஏக்கர் நிலம் என்று தெரிவித்து ஏமாற்றி விட்டதாக கோபம் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அரை ஏக்கர் நிலத்திற்கு பணத்தை பெறுவதற்காக தனபால் தோட்ட வீட்டிற்கு கருப்பையாவும், ராஜ கண்ணுவும் சென்றிருக்கிறார்கள். அங்கு மூவருக்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தபோது தனபால் வீட்டிற்குள் சென்று துப்பாக்கியை எடுத்து வந்து கருப்பையாவை இடுப்பு மற்றும் காலில் சுட்டு இருக்கிறார்.
அவர் துப்பாக்கி சூடு நடத்திய போது ராஜகண்ணும் அவரை தடுக்க முயற்சி செய்ததால் அவருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மலைப்பகுதியில் இருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.