நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி அதிகரித்து வரும் தங்கத்தின் விலை பல பெண் பிள்ளைகளை பெற்ற குடும்பங்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
அதோடு, வீட்டில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் தைரியமாக ஒரு குண்டுமணி தங்கத்தை கூட அணிந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
அப்படி அணிந்து சென்றால் அந்த தங்கத்தாலேயே தங்களுடைய உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ? என்ற அளவிற்கு தமிழகத்தில் நிலைமை மோசமாக இருக்கிறது.
அந்த வகையில், அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்துள்ள தேளூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி விவசாயியான இவர், தன்னுடைய வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்தார்.
அதன் பிறகு விவசாய மோட்டார் அறையில் இருந்திருக்கிறார். பகல் ஒரு மணி அளவில் அவருடைய மனைவி கோவிந்தசாமிக்கு மதிய உணவு வழங்கிவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அதன் பிறகு வழக்கம் போல மாலை சமயத்தில் வீட்டிற்கு வரவேண்டிய கோவிந்தசாமி வெகு நேரம் ஆன பின்னரும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அவர் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வராததால் அவருடைய மனைவி மீண்டும் வயலுக்கு சென்று பார்த்து இருக்கிறார்.
அப்போது கோவிந்தசாமி தலையில், அடிபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார் கணவருடைய நிலையை கண்ட மனைவி கதறி அழுதிருக்கிறார்.
அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவருக்கு முதலுதவி செய்து அதன் பிறகு பரிசோதித்துப் பார்த்தபோது, அவர் உயிரிழந்து விட்டதை அவர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள்.
அதன் பிறகு இது குறித்து தேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் விரைவாக வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் கோவிந்தசாமி அணிந்திருந்த அரைப்பவுன் மோதிரம் மற்றும் அவர் கையில் வைத்திருந்த 5000 ரூபாய் பணத்தை காணவில்லை என்று அவருடைய மனைவி கூறி இருக்கிறார்.
கோவிந்தசாமி நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாரா? அல்லது நகை பணத்திற்காக வேறு யாராவது அவரை கொலை செய்தார்களா? என்ற விதத்தில் காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.