கோவை சவுரிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் 25 வயது இளம்பெண். இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் ஹார்டுவேர் கடை வைத்துள்ளார். கனவருடன் கடையை நானும் சேர்ந்து பார்த்துக் கொள்கிறேன். எங்களது கடைக்கு போத்தனூரை சேர்ந்த சென்னை மற்றும் கோவையில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் எனது கணவரின் நண்பரான சங்கர் (35) என்பவர் அடிக்கடி கடைக்கு வருவார். அப்போது சங்கருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.
என்னுடைய கணவர் இல்லாத நேரத்தில் கடைக்கு வரும் சங்கர் என்னுடன் நட்பாக பழகினார். ஒருநாள் என்னை ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அதன் பிறகு அந்த புகைப்படத்தை எனது கணவரிடம் காண்பித்து விடுவேன் என என்னை மிரட்டினார். இந்நிலையில் என்னை மீண்டும் ஓட்டலுக்கு வருமாறு வற்புறுத்தினார். நானும் பயந்து போய் ஹோட்டலுக்கு சென்றேன். அங்கு என்னை அவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் ஹோட்டலில் ஒன்றாக இருந்ததை எனக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். உன்னை நான் திருமணம் செய்து கொள்கின்றேன் உன் கணவரை விவாகரத்து செய்துவிடு என்று கூறினார். இதை உண்மை என்று நம்பி நான் எனது கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தேன். தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் சங்கர் தொடர்ந்து என்னிடம் திருமணம் செய்வதாக கூறி என்னுடன் பலமுறை உறவு கொண்டார். நான் அவர் சொல்படி கேட்கா மறுத்தால் இருவரும் ஒன்றாக இருக்கும் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி வருகிறார்.
அதுமட்டுமின்றி என்னை மிரட்டி என்னிடம் இருந்து பல்வேறு கால கட்டங்களில் நகை மற்றும் பணத்தை வாங்கி உள்ளார். இப்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பணம் மற்றும் நகைகளை பெற்ற சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் இளம் பெண்ணை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்து நகை மற்றும் பணத்தை பெற்று ஏமாற்றிய சங்கர் மீது நம்பிக்கை மோசடி உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலை மறைவாக உள்ளே சங்கரை தேடி வருகின்றனர்.