இந்த அரசியல்வாதிகள் பொதுமக்களின் வாக்கை கவர்வதற்காக பல்வேறு மேடைகளில் பல வாக்குறுதிகளை வழங்குவார்கள். அதில் ஒன்றுதான் பெண்களின் பாதுகாப்பு பல அரசியல்வாதிகள் இதை வைத்து தான் தற்போது அரசியல் செய்து வருகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் எங்கும் எப்போதும் சுதந்திரமாக செயல்படலாம், அவர்களுக்கு 24 மணி நேரமும் நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம் என்றெல்லாம் வசனம் பேசி அரசியல்வாதிகள் ஓட்டு கேட்பது வழக்கம்.
அவர்களின் இந்த பேச்சைக் கேட்டு பொதுமக்களும் காலம் காலமாக வாக்களித்து ஏமாந்து வருகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. தன்னுடைய சொந்த வீட்டிலேயே பெண்களால் தற்போது பாதுகாப்பை உணர முடியவில்லை. அப்படி இருக்கும்போது பொதுவெளியில் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற கேள்வி பலரின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில், நுங்கம்பாக்கத்தில் வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கே ஏராளமான ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் வேலை செய்து வருகிறார்கள். இந்த அலுவலகத்தில் கடந்த 12 வருடங்களாக மூத்த வரி விதிப்பு அதிகாரியாக அண்ணாநகரைச் சேர்ந்த ரொக்ஸ்(36) என்பவர் வேலை பார்த்து வருகின்றார்.
அதை அலுவலகத்தில் கணவனை இழந்த ஒரு 34 வயதான பெண் கடந்த 5 வருடங்களாக தூய்மைப்படுத்தும் பணியை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி ரொக்ஸ் தன்னுடைய அறையை சுத்தம் செய்ய வரவேண்டும் என்று அந்த பெண்ணை அழைத்து இருக்கிறார். அந்தப் பெண் அறைக்குள் வந்து சுத்தம் செய்ய முயற்சி செய்தார். திடீரென்று அந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அந்த அதிகாரி முயற்சி செய்திருக்கிறார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வருமானவரித்துறை அலுவலகத்தில் இருக்கின்ற உயர் அதிகாரியிடம் பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் வழங்கினார். ஆனால் உயர் அதிகாரிகள் அந்த பெண்ணின் புகாரை கண்டு கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு இதனை பெரிதாக்க வேண்டாம் என்றும் அந்தப் பெண்ணிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த மூத்த அதிகாரி அந்த பெண்ணிற்கு தொலைபேசியில் அழைத்து தகாத முறையில் பேசி தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
அவருடைய தொடர் தொந்தரவால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், கடந்த 15 ஆம் தேதி வீட்டில் இருந்த எலி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். பின்பு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து அந்த பெண் புகார் வழங்கினார். அதன் அடிப்படையில் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் பெண் வன்கொடுமை உள்ளிட்ட 2 பிறவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த மூத்த வரி விதிப்பு அதிகாரியை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.