சமீபத்தில் அதிமுக பொதுகுழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ காத்திருக்கிறது.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்திற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்க வேண்டும் எனவும், பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் மனு வழங்கப்பட்டது.
ஆனால் இருக்கையை மாற்றி அமைக்க சபாநாயகர் அனுமதி வழங்காததை கண்டிக்கும் விதமாக, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சட்டசபை உறுப்பினர்கள் கடந்த சட்டப்பேரவை தொடரின் போது போராட்டத்தில் ஈடுபட்டார்கள் இந்த சூழ்நிலையில்தான் பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.
கடந்த 23ஆம் தேதி இந்த தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் யார் அமர்வார்கள் என்று இப்போதே கேள்வி எழத் தொடங்கிவிட்டது.
இந்த சூழ்நிலையில் தென்காசியில் நேற்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சபாநாயகர், சட்டப்பேரவையில் யாரை இங்கு அமர வைக்க வேண்டும் என்பது சட்டப்பேரவை தலைவரின் முழு உரிமை என்று கூறினார். முன்னதாக திருநெல்வேலியில் பத்திரிகையாளர்களிடம் பேசி இருந்த அவர், சட்டப்பேரவைக்கு தனித்துவமான அதிகாரம் இருக்கிறது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.