கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமோகா நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கடந்த வியாழக்கிழமை தமிழ் வாக்காளர் மாநாடு நடந்தது. தமிழ் வாக்காளர்களின் ஆதரவை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் அந்த மாநாடு நடத்தப்பட்டது.
அந்த மாநாட்டின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது சற்றென்று மேடையில் இருந்த முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா எழுந்து தமிழ் தாய் வாழ்த்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
அதன் பிறகு அவர் வற்புறுத்தியதால் கன்னட தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் அவர்களுடைய வருத்தத்தையும், கண்டனத்தையும் கூறி வருகிறார்கள். இது குறித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ள திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தமிழ் தாய் வாழ்த்து பாடலை இழிவு படுத்தும் விதத்தில் செயல்படும் பாரதிய ஜனதா கட்சியினரை தடுக்க இயலாத அண்ணாமலை தமிழ் மக்களை பற்றி எப்படி கவலைப்படுவார்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
ஒரு சாதாரண மேடை நாகரிகம் கூட இல்லாமல் தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாதியில் நிறுத்தச் சொன்னதன் மூலமாக தமிழ் தாயை இழிவு படுத்தி விட்டார்கள் என்று பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கன்னட மொழிக்கும் தாய்மொழி தமிழ் தான் கன்னடத்திற்காக தமிழை இழிவு படுத்துவது தாய்க்கும் தாயை இழிவு படுத்துவதற்கு சமமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டதை பார்த்து இடிந்து விழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ள அவர், பாதியில் நிறுத்தியது ஆதி மொழிக்கு அவமானம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அதோடு, இந்த சர்ச்சை குறித்து பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ள தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, ஈஸ்வரப்பா எந்த விதமான தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் தமிழ் தாய் வாழ்த்து மறுபடியும் முழுமையாக ஒளிபரப்பப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்து இருந்த நிலையில், பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மறுபடியும் பாடப்படவில்லை என்று சிவமோகா தமிழ் தாய் சங்கத்தின் செயலாளர் தண்டபாணி தெரிவித்திருக்கிறார்.