தற்போது இந்த நவீன காலத்தில் கைபேசியிலேயே அனைத்தும் அடங்கி விட்டது. ஒரு கைபேசி மட்டும் கையில் இருந்தால் போதும், உலகில் நாம் எங்கிருந்தாலும் நம்மால் இருந்த இடத்திலிருந்து நினைத்ததை செய்து முடிக்க முடியும் என்ற அளவிற்கு வந்துவிட்டது.
அந்தளவிற்கு இந்த கைபேசிகளின் மூலமாக அனைவரின் உள்ளங்கையிலும் உலகம் அடங்கி விட்டது. ஆனால் நவீன முறை என்று சொல்லிக்கொண்டு அனைத்து வேலைகளையும் சுருக்கமாக செய்து முடிப்பது பல அபாயங்களையும் சந்திக்கத்தான் செய்கிறது.
தற்போது வங்கியில் நாம் கஷ்டப்பட்டு, உழைத்து சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தை யாரோ ஒருவர் நம்முடைய அனுமதியே இல்லாமல் எடுத்துச் செல்வது போன்ற திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன, அந்தளவிற்கு மோசமான சூழ்நிலை நிலவுகிறது.அதேபோல இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது ஒட்டுமொத்த நாடும் எதோ ஒரு வகையில் பாதுகாப்பில்லாமல் இருக்கிறதோ? என்ற எண்ணமும் தோன்றி மறைகிறது.
தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு சேவை மையத்தின் இயக்குனர் ஒருவரின் கைபேசிக்கு சமீபத்தில் தொடர்ச்சியாக அழைப்புகள் வந்துள்ளனர். அவர் அழைப்பை எடுத்தும் மறுமுனையில் எந்தவிதமான பதிலும் இல்லை, தொடர்ச்சியாக அழைப்புகள் இதேபோன்று வந்துள்ளனர்.
அதன் பிறகு அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 12 லட்சம், 4.6 லட்சம், 2 முறை ரூபாய் 10 லட்சம் ரூபாய், 13.4 லட்சம் என்று 4 பேரின் வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது. பண பரிமாற்றத்திற்கான ஓ டி பி நம்பரும் அவருக்கு வரவில்லை. உடனடியாக அவர் சைபர் கிரைம் காவல் துறையில் புகார் வழங்கினார். யார், யார் வங்கி கணக்குக்கு பணம் சென்றதோ, அவர்களை எல்லாம் அழைத்து விசாரணை நடத்தியபோது மோசடியாளர்கள் கமிஷன் தருவதாக தெரிவித்து தங்களுடைய வங்கி கணக்கை கேட்டதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
வங்கி கணக்கில் பொதுவாக பணப்பரிமாற்றங்கள் செய்யும்போது பல நிபந்தனைகள் இருக்கும். ஆனால் 50 லட்சத்தை இழந்த அந்த இயக்குனரின் வங்கி கணக்கு நடப்பு கணக்கு என்ற காரணத்தால் அந்த கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் எந்த விதமான தடையும் இல்லாமல் மோசடி நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து நடந்த முதல் கட்ட விசாரணையில் சிம்ஸ்வாப் முறையில் பணத்தை திருடி இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.சில தொழில்நுட்ப நுணுக்கங்களை பயன்படுத்திக் கொண்டு மோசடியாளர்கள் ஒரு நபருக்கு செல்போனில் அழைப்புவிடுத்து, அந்த சிம் கார்டை ஆக்டிவேட் செய்து அதன் மூலமாக வங்கியிலிருந்து பணத்தை மோசடி செய்யும் புதிய யுத்தியை கையாண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சைபர் கிரைம் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, இந்த விதத்தில் திருடுபவர்கள் கைப்பேசி சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு கால் செய்து சிம் கார்டை ஆக்டிவேட் செய்கிறார்கள். அது ஆக்டிவேட் ஆனவுடன் அந்த கைபேசிக்குரிய முழு கட்டுப்பாடுகளையும் அவர்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த ஜவுளி அதிபரிடம் 1.8 கோடி ரூபாய் இதே முறையில் திருடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.