அரசியல்வாதிகள் செய்யும் சிறு, சிறு தவறுகளால் பொதுமக்கள் மிகப்பெரிய அவதியை சந்திப்பார்கள் என்பது அப்போது ஊர்ஜிதமாகி வருகிறது. அரசியல்வாதிகள் ஏதாவது ஒரு தவறை செய்து விட்டு அதனால் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், அது தொடர்பாக அவர்களிடம் கேள்வி எழுப்பினால் இந்த சிறிய தவறுக்கு என்னிடம் கேள்வி கேட்கிறாயா? என்று வாக்களித்த மக்களிடமே திரும்பி அவர்கள் கேள்வி கேட்பார்கள்.
ஆனால் அரசியல்வாதிகளுக்கு சிறிய தவறுகளாக தெரியும், ஒரு சில சம்பவங்களால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கிறார்கள்.தவறின் அளவு சிறியதுதான் என்றாலும் அதனால் ஏற்படும் பின்விளைவு பொதுமக்களை எந்த வகையில் பாதிக்கும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதே கிடையாது.
அந்த வகையில், மதுரை மாநகராட்சி புறநகர் வார்டுகளில் தெரு விளக்கு எரியாததால் இரவில் நடந்து செல்லும் பெண்களிடம் மோட்டார் வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் நகைப்பறிப்பில் ஈடுபடுவது தற்சமயம் அதிகரித்திருக்கிறது.
அதாவது, மதுரை புதூர் பெட்ரோல் பங்க் முதல் ஐயர் பங்களா செல்லும் சாலையில் பெரும்பாலான தெரு விளக்குகள் செயல்படவில்லை. ஆகவே நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து இரு சக்கர வாகனங்களில் வரும் வழிப்பறிக் கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்னால் இதே போல கே.வி.ஆர் நகரில் ராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் ஒன்றரை பவன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்று இருக்கிறார்கள். மெயின் ரோட்டில் ஆட்களை நிறுத்திவிட்டு நடந்து சென்று பெண்களிடம் வழிப்பறி செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் செல்வதாக பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் மதுரை புறநகர் பகுதிகளுக்கு காவல்துறையினர் சார்பாக ரோந்துக்கு செல்வதே கிடையாது. இது இருசக்கர வாகன கொள்ளையர்களுக்கு சாதகமாகி விடுகிறது. காவல்துறையினர் குறைந்தபட்சம் இரவில் ரோந்து பணிக்கு சென்றால் மட்டுமே வழிப்பறி சம்பவங்களை கட்டுப்படுத்த இயலும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.