வெளிச்சந்தைகளில் சட்டவிரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயத்தை சாப்பிட்டு பலர் இறந்து போவதை தவிர்க்கும் விதமாக அரசு ஏற்று நடத்தும் நிறுவனமாக தொடங்கப்பட்டது தான் டாஸ்மாக் நிறுவனம்.ஆனால் இந்த டாஸ்மாக் நிறுவனம் காரணமாகவே தற்போது லட்சக்கணக்கான தமிழக குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து விட்டனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் கங்காத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மனுவில் நாள்தோறும் இரவு 10 மணி அளவில் மதுபான கடை மற்றும் பார் உள்ளிட்டவை மூடப்படுவதால் மூடப்படும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள் மதுபான கடை மற்றும் சாலை ஓரத்திலும், அருகில் இருக்கின்ற பொது இடங்களிலும் அமர்ந்து மது குடித்துவிட்டு கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பொது இடங்களிலும், கால்வாய்களிலும் வீசி சென்று விடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதைத் தவிர சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி விட்டு சென்று விடுவதால் சுகாதார சீர்கேடுகள் உண்டாவதாகவும், தனியே செல்பவர்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2003 ஆம் வருடம் ஏற்படுத்தப்பட்ட மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் மதுபான கடைகளை திறந்து வைக்கலாம் என்று அனுமதிக்கப்படுவதால் மதுபானத்தை வாங்குபவர்கள் அதனை குடிப்பதற்கு பார் இயங்கும் நேரங்களை மாற்றம் செய்தால் பொது இடங்களில் நடைபெறும் குற்றங்களை தடுக்கலாம் என்று கடந்த 9ம் தேதி தமிழக மதுவிலக்கு துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மனு வழங்கியும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று அந்த மனுவில் கூறி இருக்கிறார்கள்.
ஆகவே டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் மது அருந்தும் விடுதிகள் மூடப்பட்ட பின்னர் பொது இடங்களில் மது அருந்துவதை தடுத்து அதனை நெறிமுறைப்படுத்தும் விதத்தில் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, டி.பரதசக்கரவர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 4ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் நீதிபதிகள்.