சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் வேலூர் போன்ற இடங்களில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடை பார்களின் டெண்டர் காலம் கடந்த ஆகஸ்டு 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன.
இதனால் குடிகாரர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனையடுத்து, பார்களுக்கான உரிமம் குறித்து டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பார் டெண்டர் நடைமுறையை தொடரலாம் எனவும், மற்றபடி யாருக்கும் உரிமம் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து சென்னை உட்பட பல இடங்களில் ஒப்பந்தம் முடிந்த டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஐகோர்ட் உத்தரவு கிடைத்ததும் பார்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பிய உத்தரவில் தெரிவித்துள்ளது.