விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் வசித்து வருபவர் 18 வயது இளம் பெண். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி தினமும் கல்லூரிக்கு சென்று வரும்போது, உளுந்தூர்பேட்டை, உளுந்தாண்டார் கோவில் பகுதியில் வசித்து வரும், பழனி என்பவர் மகன் சுதாகர் (26), அந்த மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதை தொடர்ந்து, மாணவி ஒரு நாள் கல்லூரிக்கு சென்று வரும்போது மாணவியை வழிமறித்து, நீ குளிக்கும் போது வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நான் சொல்வதை கேட்காவிட்டால் சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை பதிவிடுவேன் என்று சொல்லி மிரட்டி உள்ளார். இதைக் கேட்டு பயந்து போன மாணவி வீட்டுக்கு வந்து விஷம் குடித்தார்.
விஷம் குடித்த மாணவியை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அங்கு அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் அடிப்படையில், கண்டாச்சிபுரம் சப் இன்ஸ்பெக்டர் பொன்னரங்கம், சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து அவரை விசாரித்து வருகின்றனர்.