முன்பெல்லாம் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் அந்த குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் வழக்கம் இருந்து வந்தது. கல்வி அறிவு என்பது சற்றும் இல்லாத போது அது போன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்தது.
அதன் விளைவுகளை இன்றைய இளைஞர்கள் அனுபவித்து வருகிறார்கள். காரணம், திருமண வயதை அடைந்து விட்ட இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் பல இளைஞர்களும், பெற்றோர்களும் திண்டாடி வருகிறார்கள்.
கல்வி, அறிவியல்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி என்று அனைத்திலும் சீரான வளர்ச்சியில் நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் கூட பெண் குழந்தைகளை கொலை செய்யும் கொடூரம் நடைபெற்று தான் வருகிறது.
அந்த வகையில், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே இருக்கின்ற தேவராஜ் நகர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், ரம்யா என்ற தம்பதியருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி கடமலைகுண்டு அரசு மருத்துவமனைகள் ரம்யாவிற்கு மறுபடியும் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
சென்ற 4 நாட்களுக்கு முன்னர் ரம்யாவின் வீட்டிற்கு சென்ற அங்கன்வாடி பணியாளர் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது டிசம்பர் மாதம் 12ஆம் தேதி குழந்தை மூச்சு திணறி உயிரிழந்து விட்டதாகவும், குழந்தையின் உடலை வீட்டின் அருகே புதைத்து விட்டதாகவும் ரம்யா தெரிவித்திருக்கிறார்.
ஆனால் குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக சமூக நலத்துறை அலுவலர் சியமளா தேவி புகார் வழங்கினார். அதன் பேரில் வருவாய் அதிகாரிகளின் முன்னிலையில் இறந்து போன பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அதன் பிறகு அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டது..
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவு வந்த பிறகு தான் குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்ன? என்பது முழுமையாக தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.