சென்னை புழல் திருவிக தெருவை சேர்ந்தவர் ரிதம். இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த சூழ்நிலையில், நேற்று இரவு அவருடைய வீட்டின் அருகே நண்பர் விஜய்யுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று ரிதம்மை சரமாரியாக வெட்டியது.
இதனை தடுக்க முயன்ற அவருடைய நண்பர் விஜயையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்தனர்.
இவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடோடி வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவசர ஊர்தியின் மூலமாக இருவரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரிதம் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த விஜய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.