திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைபுதூர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன்(33). இவர் கூலிவேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (26). சில காலமாக கார்த்திகேயன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் கார்த்திகேயனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு தம்பதியினர் இருவரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென்று கார்த்திகேயன் கண் விழித்து பார்த்தபோது காயத்ரியை படுக்கையில் இல்லாததை கண்டு அவரை தேடி சென்றார் அப்போது மேம்பாலம் அருகே காயத்ரி நின்றிருந்து உள்ளார்.
அங்கு சென்ற கார்த்திகேயன் காயத்ரியிடம் எதற்காக இங்கு வந்தாய், இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என கேட்டு சண்டை போட்டுள்ளார். அப்போது, இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், காயத்ரியை தாக்கி, அவரது தலையில் கல்லை தூக்கிபோட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காயத்ரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காயத்ரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காயத்ரி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மனைவியை கொலை செய்த கணவன் கார்த்திகேயனை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.