கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சி பெரியார் நகர் பகுதியில் டீ கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த வாலிபர் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பட்டப் பகலில் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டனர்.
இது குறித்து ஓசூர் துணை காவல் துறை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், உயிரிழந்தவர் சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திலக் (25) என்ற இளைஞர் என தெரிய வந்தது.
சொப்பட்டி கிராமத்தில் சென்ற வருடம் ஸ்ரீராம் சேனா ஓசூர் நகர செயலாளராக இருந்த மோகன் பாபு (25) என்ற இளைஞரை திலக் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது. இத்தகைய நிலையில்தான், திலக்கின் கொலை சம்பவம் பழிக்கு, பழி தீர்க்கும் விதத்தில் நடைபெற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இளைஞர் திலக்கின் உடல் ஓசூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக காவல்துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.