நார்வேயின் எண்ணெய் மற்றும் கப்பல் நிறுவனம் , அந்நாட்டின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் – உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது. இந்த விவகாரம் உலக அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதனையடுத்து, உக்ரைன் தரப்புக்கு ஐரோப்பிய கூட்டணி நாடுகள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஐரோப்பிய தேசமான நார்வேயை சேர்ந்த ‘ஹால்ட்பக் பங்கர்ஸ்’ நிறுவனம் அமெரிக்க ராணுவத்துக்கான எரிபொருள் விநியோகித்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க ராணுவ கப்பல்களுக்கு விநியோகிக்கப்பட்டுவந்த, ஆண்டுக்கு சராசரியாக சுமார் 3 மில்லியன் லிட்டர் எரிபொருள் விநியோகம் தடைபடும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.
எனினும், நார்வே துறைமுகங்களில் உள்ள அமெரிக்க ராணுவ கப்பல்கலுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் தடைபெறாது கிடைக்கும் என்று அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை கடைப்பிடித்து வரும் நார்வே அரசு உறுதியளித்துள்ளது.
பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து, நிறுவனம் ரஷ்ய நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளை நிறுத்தியதோடு, அதன் விளைவாக கணிசமான வருவாய் இழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது அமெரிக்கா உடனான பரிவர்த்தனையை நிறுத்தியது மிகப்பெரிய வருவாய் இழப்புக்கு நேரிடும் எனக் கூறப்படுகிறது.