காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மை இயக்கத்தில் பங்கு பெற சக குடிமக்களுக்கு பிரதமர் மோடி ஒரு தனித்துவமான அழைப்பை விடுத்துள்ளார். அக்டோபர்1 ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து குடிமக்களும் இணைந்து மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு ‘தூய்மையாக அஞ்சலி’ செலுத்த வேண்டும் என்றார்.
அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தூய்மை குறித்த ஒரு பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூய்மை தொடர்பான இந்த பிரச்சாரத்தில் நீங்களும் நேரம் ஒதுக்கி உதவ வேண்டும். உங்கள் தெரு அல்லது அக்கம்பக்கத்தில் உள்ள ஒரு பூங்கா, ஆறு, ஏரி அல்லது வேறு எந்த பொது இடத்திலும் இந்த தூய்மை பிரச்சாரத்திலும் நீங்கள் சேரலாம்.
சந்தை இடங்கள், ரயில் பாதைகள், நீர்நிலைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் அனைத்துத் தரப்பு குடிமக்களும் இணைய வேண்டும். ஒவ்வொரு நகரம், கிராம பஞ்சாயத்து, விமானப் போக்குவரத்து, ரயில்வே, தகவல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளும், பொது நிறுவனங்களும் குடிமக்கள் தலைமையிலான தூய்மை நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யும்.
தூய்மை இயக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய ஆர்வமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம், தனியார் நிறுவனம் உள்ளிட்டவை உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்திற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தூய்மை பணிகள் குறித்த தகவல்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட https://swachhatahiseva.com/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் .