தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று அமித் ஷா அறிவித்துள்ளார். இந்த நிலையில் பாஜக உடன் கூட்டணி மட்டுமே.. கூட்டணி ஆட்சி ஒருபோதும் கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இன்று காலை சட்டமன்ற கூட்டத்தொடர் கூடியது. செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு ஆகிய 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம் என அதிமுகவினர் சபாநாயகரிடம் முறையீடு செய்தார்கள்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, “அரைமணி நேரத்திற்கு முன்னதாக கடிதம் கொடுத்தீர்கள், அது பரிசீலனையில் உள்ளது. நான் என்னுடைய முடிவை சொல்லவில்லை. ஏற்கனவே அலுவல் நிறைய இருக்கிறது அதனால் இன்று எடுக்க முடியாது” என்று தெரிவித்தார். சபாநாயகரின் பதிலால் அதிருப்தி அடைந்த அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுக-பாஜக கூட்டணி குறித்து விளக்கினார். “நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் . அதைபற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை, தகுதி இல்லை. எங்கள் கூட்டணியை பார்த்து முதலமைசருக்கு பயம் வந்துவிட்டது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்று ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைபாடு..
தமிழ்நாட்டில் தேசிய ஜன நாயக கட்சியில் மேலும் பல கட்சிகள் இணையும். அதுகுறித்து இப்போது கூற முடியாது என்றார். மேலும் தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக உடன் கூட்டணி மட்டுமே.. கூட்டணி ஆட்சி ஒருபோதும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Read more: Gold rate: தங்கம் வாங்குவோருக்கு பேரிடி.. கிராம் ரூ.9,000-த்தை நெருங்குகிறது..!! இன்றைய ரேட் என்ன?