அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு சார்பாக மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் திருச்சி நகரில் அமைந்துள்ள வி எம் எஸ் மஹாலில் வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டம் ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சர் போன வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி மாநகர மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் இந்தியாவின் அடுத்த பிரதமராகவும் நரேந்திர மோடி தான் வருவார் என உறுதிப்பட கூறினார். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிற்கு வளமான மற்றும் வளர்ச்சி மிக்க ஆட்சியை மோடி கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதை விரும்புவதாகவும் கூறினார்.
இதற்கு தற்போதைய அதிமுகவின் பொது செயலாளர் ஆக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த காரணங்களுக்காக மறுப்பு தெரிவித்து வருவதாக பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் ஓபிஎஸ். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச்செயலாளர் மற்றும் முதல்வர் பதவியை கொடுத்த பின்பும் தனது சொந்த காரணங்களுக்காக பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் கூட்டணி அமைக்க மறுப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அளித்த பேட்டியில் “நான் ஒரு பந்து மாதிரி என்னை அடிக்க அடிக்க மேல் எழும்பி தான் வருவேன்” என தெரிவித்திருக்கிறார். வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த கூட்டணி அமைப்பது மற்றும் வேட்பாளர்கள் தேர்வு செய்வது என்பது போன்றவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். மீண்டும் சட்டப் போராட்டத்தின் மூலம் அதிமுக கொடி மற்றும் கட்சியின் சின்னம் மீட்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.