ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் பலியான அதிர்ச்சியினை தொடர்ந்து, அந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உண்மைகளை தேசிய புலனாய்வுத்துறை (NIA) தற்போது ஒரு ஒன்றுக்கொன்று அம்பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் சார்ந்த ஹேக்கர்கள் இந்திய பாதுகாப்புத் துறையினரின் முக்கிய இணையதளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்திய பாதுகாப்புத்துறையின் முக்கிய இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்ஸ் சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு துறை வட்டாரங்களின் தகவலின்படி, இந்த சைபர் தாக்குதல்கள் ராணுவ அதிகாரிகளின் லாகின் விபரங்கள் உள்ளிட்ட அதிநுணுக்கமான தகவல்களை முறைகேடாக பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
‘Pakistan Cyber Force’ என்ற X கணக்கு, இந்தியாவின் ராணுவ பொறியியல் சேவைகள் (MES) மற்றும் மனோகர்பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் (IDSA) தரவுகளை ஹேக் செய்ததாகக் கூறியுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறைக்கு உட்பட்ட பொது நிறுவனம் ஒன்றான Armoured Vehicle Nigam Limited நிறுவனத்தின் இணையதளத்தை மாற்ற முயற்சி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது, அந்த இணையதளம் முழுமையாக முடக்கப்பட்டு, விரிவான ஆய்விற்குப் பின் மீண்டும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பாகிஸ்தான் ஆதரவு கொண்ட ஹேக்கர்கள் சார்பில் மேலும் ஏதேனும் தாக்குதல்கள் நடைபெறுமா என்பதையும் கவனித்து வருகின்றனர்.
‘Pakistan Cyber Force’ எனும் அந்தக் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்ட நிலையில், அதன் பதிவுகளில், இந்திய டாங்கியின் படம் நீக்கப்பட்டு பாகிஸ்தான் டாங்கியின் படம் இடப்பட்டிருப்பது போன்ற விபரீத காட்சிகள் இருந்துள்ளன. மேலும், “உங்கள் பாதுகாப்பு ஒரு தோற்றமே! MES தரவுகள் கைப்பற்றப்பட்டன” என குறிப்பிட்டு, இந்திய ராணுவ அதிகாரிகளின் பெயர் பட்டியலுடன் மிரட்டல் பதிவும் பகிரப்பட்டுள்ளது. IDSA இணையதளத்தில் 1,600 பயனாளர்களிடம் சேர்ந்த 10 ஜிபி-க்கு மேற்பட்ட தரவுகளை ஹேக் செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள் தற்போது முழுமையான ஆய்வுகளிலும், பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இருபுற ஒப்பந்தங்களை வாபஸ் பெறும் அளவுக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பாகிஸ்தான் வழக்கம்போல் தங்களுக்குத் தொடர்பு இல்லையென மறுத்து, ஆதாரம் கேட்டும் வருகிறது. கடந்த காலங்களில் நடந்த மும்பை 26/11 உள்ளிட்ட தாக்குதல்களுக்கு இந்தியா வழங்கிய ஆதாரங்களுக்கும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததை நினைவுபடுத்தும் வகையில் இந்த தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. இதுவரை பாகிஸ்தான் ஹேக்கர்கள் APS ஸ்ரிநகர், APS ரானிகெட், AWHO மற்றும் இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு தளங்களையும் தாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Read more: பஹல்காம் பயங்கரவாதிக்கு பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி..!! NIA விசாரணையில் திடுக் தகவல்..