பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2000 17வது தவணையாக சுமார் 20,000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்க உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான்; பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் 17வது தவணையாக சுமார் 20,000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்க உள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி, 2024 ஜூன் 18 அன்று வாரணாசியில் 17-வது தவணையை விடுவிக்கவுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் 30,000 க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு கிருஷி சகி (வேளாண் தோழிகள்) என்ற சான்றிதழ்களை பிரதமர் வழங்க இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் உத்தரபிரதேச அரசுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்ய இருப்பதாக கூறினார்.
விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறார். பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் 17வது தவணையாக ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான தொகையை வாரணாசியில் இருந்து பிரதமர் விடுவிக்க இருப்பதாகவும் இதன் மூலம் 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள். கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டம், 2019 பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இதில் பயனாளிகளைப் பதிவு செய்வதிலும், சரிபார்ப்பதிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுவதாக கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசால் இதுவரை நாடு முழுவதும் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ. 3.04 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் சுமார் 2.5 கோடி விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் நேரலையில் இணைந்து பங்கேற்பார்கள் என்று அவர் கூறினார். 732 வேளாண் அறிவியல் மையங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் என அவர் தெரிவித்தார்.