சந்திரயான்-3 மிஷனில் ஈடுபட்ட ISRO விஞ்ஞானிகளை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவிக்க உள்ளார்.
கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் ரோவர் உலா வருகிறது. 14 நாட்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது.
இந்தியாவின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க மைல்கல் சாதனையை பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை கொண்டாடி வருகின்றனர். பலரும் இஸ்ரோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஏற்கனவே இஸ்ரோ குழுவிற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி கிரீசில் இருந்து விமானம் மூலம் கர்நாடகா வந்தடைந்தார். இன்று இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்கிறார்.
நேரடியாக பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு அதிகாலை 5.55 மணியளவில் பிரதமர் மோடி வந்தடைந்தார். கர்நாடக பா.ஜ.க. தலைவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். காலை 6.30 மணியளவில் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பீனியாவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். காலை 7 மணியளவில் இந்தியா சரித்திர சாதனை படைக்க பணியாற்றிய விஞ்ஞானிகளைச் சந்தித்து பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்.