போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவராக போப் போற்றப்படுகிறார். கடந்த 2013 மார்ச் 13-ம் தேதி 266-வது போப்பாக பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே போல் பிரான்சிஸ் உடல்நலமின்றி இருந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். எனினும், தேவாலய பணிகளை தொடர்ந்து செய்து வந்தார்.
கடந்த பிப்ரவரியில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த மார்ச் 23-ம் தேதி வாடிகன் திரும்பினார். வயது முதிர்வு காரணமாக அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால் கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சுவாச பிரச்சினை, சுவாச பாதையில் தொற்று, நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இந்நிலையில் நேற்று அவர் தனது இல்லத்தில் காலமானார்.
போல் பிரான்சிஸ் மறைவிற்கு பல்வேறு நாட்டின் அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவை ஒட்டி இந்தியாவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசு சார்பில் இன்று மற்றும் நாளை துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.