குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகத்திற்கு வந்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில், அவ்வப்போது பல்வேறு தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து, அரசியல் சூழல் தொடர்பாக கண்காணித்து செல்வது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தான், குடியரசுத் தலைவரும் தற்போது தமிழகத்திற்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது, கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து மசனகுடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக, இன்று தமிழகத்திற்கு வந்த குடியரசுத் தலைவர், அங்கு இருந்து, சாலை மார்க்கமாக, தெப்பக்காட்டில் இருக்கின்ற வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்லவிருக்கிறார். அந்த முகாமில், ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபன்ட் லிஸ்பரர்ஸ் என்ற குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதிகளை சந்தித்து வாழ்த்த உள்ளார்.
அத்துடன், இந்த முகாமில், இருக்கின்ற யானை பாகன்களிடமும் உரையாற்ற இருக்கிறார், இந்த முகாமில் நடக்கும் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மறுபடியும் சாலை மார்க்கமாக மசனகுடிக்கு செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக, மைசூருக்கு சென்று, அதன் பிறகு மீண்டும் சென்னைக்கு வருகிறார்.
குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு, காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், தொரப்பள்ளி, தெப்பக்காடு சாலை, பந்திப்பூர், தெப்பக்காடு, மசனகுடி சாலை பகுதிகளில், அதிரடிப்படையினர், நக்சல் தடுப்பு படையினர், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
குடியரசுத் தலைவர் வந்து செல்லும் வரையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற 3 மாநில எல்லைப் பகுதிகளில் இருக்கின்ற சாலைகள் மூடப்படுவதாக சொல்லப்படுகிறது.