ரூ.951 கோடியில் கட்டப்பட்டு வரும் திருச்சி விமானநிலைய புதிய முனைய பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனைத் திறந்து வைக்க பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.
தமிழகத்தில் சென்னையை அடுத்து திருச்சி விமான நிலையம் மிக முக்கியமானதாக விளங்குகிறது. எனினும் தற்போதுள்ள பயணிகள் முனையக் கட்டிடம் ஒரே நேரத்தில் 440 பயணிகளைக் கையாளும் வகையில் 11,777 சதுர மீட்டரில் மட்டுமே அமைந்துள்ளது. எதிர்காலத்தில் திருச்சி விமான நிலையம் பெருமளவில் வளர்ச்சி பெறும் என கருதப்படுவதால், அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஏற்படுத்த இந்திய விமானநிலைய ஆணையக் குழுமம் முடிவு செய்தது.
இதன்படி, ரூ.951 கோடியில் திருச்சி விமானநிலைய புதிய முனையம் கட்டுவதற்கான பணிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2 அடுக்குகளைக் கொண்ட ஒருங்கிணைந்த புதிய முனையக் கட்டுமான பணிகள் உடனடியாக தொடங்கின. இதில், ஒரே சமயத்தில் 2,900 சர்வதேச பயணிகள், 600 உள்நாட்டு பயணிகளை கையாள முடியும். புறப்பாடு பகுதியில் 10 வாயில், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் வருகின்ற ஜனவரி 2-ம் தேதி பிரதமர் மோடி இதனை திறந்து வைக்க உள்ளார்.