குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த தனது மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி தார்வாட் மாவட்டத்திற்கு உட்பட்ட தார்வாட் பகுதியைச் சேர்ந்தவர் பாரத் ஜெயந்தி லால் மகாஜன் சேட். இவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. இவரது ஒரே மகன் அகில். இவர் தனது தந்தையின் தொழிலையும், சொத்துக்களையும் பாதுகாக்காமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும், தவறான பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அகில் நடவடிக்கையால் பாரத் ஜெயந்தி லாலுக்கு குடும்பத்தினர் மத்தியில் அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து அகில் திடீரென மாயமாகியுள்ளார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, போலீசாரின் விசாரணையிலும் அகில் குறித்துத் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அகில் உறவினரின் செல்போனுக்கு வீடியோ ஒன்று வந்துள்ளது. இதில், மலை உச்சியிலிருந்து அகில் தற்கொலை செய்து கொள்வதுபோன்ற காட்சி இருந்துள்ளது. இது போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் அங்கு சென்று ஆய்வு செய்தபோது அகில் உடல் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அகிலின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரது தந்தை பாரத் ஜெயந்தி லால் முன்னுக்கு முரணான தகவல்களை கொடுத்துள்ளார். மேலும், அவரது தொலைபேசி எண்ணிலிருந்து அண்மையில் பல புதிய நபர்களுடன் பேசியுள்ளார். இதையடுத்து, அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், பெற்ற மகனை கூலிப்படையை வைத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
அகில் குடித்துவிட்டு பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக இருந்ததால் வீட்டில் தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இவரின் சமுதாயத்தில் மகனால் தனக்கு கெட்ட பெயர் வந்து கொண்டிருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாத பாரத் ஜெயந்தி லால் மகனை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி கூலிப்படையைச் சேர்ந்த 6 நபர்களுக்கு ரூ. 10 லட்சம் பணத்தைக் கொடுத்து மகனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி டிசம்பர் 1ஆம் தேதி மகனை கல்கட்டகி பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருந்த கூலிப்படையினர் அகிலை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, போலீஸார் கரும்பு தோட்டத்திற்கு சென்று புதைக்கப்பட்ட அகிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அகிலின் தந்தை பாரத் ஜெயந்தில் லால், கூலிப்படையை சேர்ந்த 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.