பூனே காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது, ₹2,200 கோடி மதிப்பிலான 1,100 கிலோ எம்.டி. வகை போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த செவ்வாய் அன்று பூனே மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குர்கும்ப் எம்ஐடிசியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் சோதனை நடத்தினர். அப்போது 700 கிலோ அளவிலான மோலி எனப்படும் மெபெட்ரோன் (எம்டி) போதைப்பொருட்களை கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் ₹ 1,400 கோடி வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அன்று மாலை, பூனே குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு டெல்லியில் இருந்து, 400 கிலோவுக்கு மேலான எம்.டி போதை பொருட்களை கைப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை மாலை, விஷ்ராந்த்வாடியில் உள்ள இரண்டு கிடங்குகளில் போலீசார் சோதனை செய்தபோது 55 கிலோ எம்.டி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினரால் உறுதி செய்யப்பட்டது. அந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பலரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், குர்கும்ப் எம்ஐடிசியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து போதைப்பொருள் சப்ளை நடப்பது தெரியவந்தது.
விரைந்து செயல்பட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் ‘எர்த் கெம் லேபரட்டரீஸ்’ என்ற மருந்து தயாரிப்பு பிரிவில் சோதனை நடத்தினர். அப்போது ₹ 1100 கோடி மதிப்பிலான 550 கிலோ எம்டி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து பூனே நகர காவல் ஆணையர் அமிதேஷ் குமார் கூறுகையில், இந்த போதைப்பொருள் மோசடியில் உள்ள தொடர்புகளை விசாரிக்க, நாடு முழுவதும் காவல்துறையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் சில வெளிநாட்டினர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஷைலேஷ் பால்கவாடே இதுகுறித்து பேசுகையில், இரண்டு ரசாயன நிபுணர்கள், தொழிற்சாலை உரிமையாளர் உட்பட 4 பேரை கைது செய்து பூனேவுக்கு அழைத்து வந்ததாக கூறினார்.
காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, குர்கும்ப் தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படும் போதை பொருட்கள் மும்பை, டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் நேபாளம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவர்கள் விரைவில் 1000 கிலோ போதை பொருட்களை தயாரிக்க இருந்தனர். அவர்களின் திட்டங்களை முறியடித்து தற்போது காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை அன்று, காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில், சோம்வார் பேத் பகுதியில் ஒரு காரை மறித்து சோதனை செய்துள்ளனர். சோதனை நடவடிக்கையின் போது 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 கிராம் எம்.டி மற்றும் ரொக்கம் ₹ 2,000 , விளையாட்டு பைகள், இரண்டு மொபைல் கைபேசிகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
காரில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்திய போது, விஷ்ராந்த்வாடியைச் சேர்ந்த ஹைதர் ஷேக் என்பவருக்கு இதில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்து குடோன் சாவியை மீட்டனர். அந்த குடோனில் சோதனை செய்தபோது, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 750 கிராம் எம்.டி. போதை பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் சந்தேகத்திற்கிடமான உப்பு நிரப்பப்பட்ட 100-200 கன்னி பைகளை போலீசார் கண்டுபிடித்தனர், அது உப்பா அல்லது எம்.டி போதைப்பொருளா என்பதை உறுதிப்படுத்த ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.