தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை திறந்து வைத்து பேசும் போது முக்கிய கருத்து ஒன்றை பகிர்ந்து கொண்டார். அதாவது கல்வியும் சுகாதாரமும் தான் இந்த ஆட்சியின் கண்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்களது குடும்ப பொருளாதார நிலை காரணமாக உயர் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. இதைப் போக்குவதற்காக உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளாக இருக்க வேண்டியது அவசியம். அதேபோல் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றால் புதுமைப் பெண் திட்டத்தில் பயனாளர்களாக முடியும். இளைநிலை கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், டிப்ளமோ, துணை மருத்துவம், ஐடிஐ, இளைநிலை முதுநிலை இணைந்த படிப்புகளில் அந்த மாணவிகள் இணையும் போது மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
கலை அறிவியல் என்றால் மூன்று ஆண்டுகள், பொறியியல் படிப்புகளுக்கு 4 ஆண்டுகள், மருத்துவப் படிப்புகளுக்கு ஐந்து ஆண்டுகள் என அவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும். அதே சமயம் படிப்பு முடித்த பின்னர் பயிற்சி காலத்திற்கு உதவித் தொகை வழங்கப்படாது. ஒரு வீட்டில் ஒன்றும் மேற்பட்ட பெண்கள் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு சென்றால் அனைவருக்குமே உதவித் தொகை வழங்கப்படும். வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகை பெற்றாலும் இந்த உதவித்தொகை வழங்குவதில் தடை இருக்காது. www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மாணவிகள் தங்கள் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 2 லட்சத்து 11ஆயிரத்து 506 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான நிபந்தனைகள் வழங்கப்பட்ட போது குடும்பத்தில் உள்ளவர்கள் யாரேனும் முதியோர் உதவித் தொகை, விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் ஆகிய சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் தகுதி பெற முடியாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் புதுமைப் பெண் திட்டத்தைப் பொறுத்தவரை இதன் பயனாளிகள் உள்ள குடும்பங்கள் மகளிர் உரிமைத் தொகை தகுதிகளைப் பெற்றிருந்தால் அதன் பயனாளிகளாவும் முடியும்.
உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தில் இரு மாணவிகள் மாதம் 1000 ரூபாய் புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெறும் போது, அவர்களது தாய் மகளிர் உரிமைத் தொகை மூலம் அவரும் மாதம் 1000 ரூபாய் பெரும் வாய்ப்பு உள்ளது.