Supreme Court: ஒரு பெண் தன் மகனின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தால், அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தற்கொலைக்குத் தூண்டுவதாக அமையாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2008 ம் ஆண்டு ஜூலை 3 அன்று காதல் திருமணத்திற்கு காதலனின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, காதலன், அவரது தாய், தந்தை, சகோதரர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கடந்த 2014ம் ஆண்டு 13ம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, தனது மகனுடன் காதல் விவகாரம் கொண்டதாகக் கூறப்படும், பெண்ணின் தற்கொலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய அவரது மனுவை நிராகரித்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட காதலனின் தந்தை. சகோதரன் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, மார்ச் 22, 2012 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்கான விண்ணப்பத்தை நிராகரித்தது.
இதை எதிர்த்து காதலனின் தாய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு, இந்த வழக்கில், தன் மகனின் காதல் திருமணத்துக்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, தாயின் ஒப்புதல் இல்லாததால் திருமணம் செய்ய முடியாது என்று காதலன் கூறியதால், காதலி தற்கொலை செய்துள்ளார். காதலனின் தாய் கூறிய வார்த்தைகளே, காதலியை தற்கொலை செய்து கொள்ள துாண்டியதாக கூறப்பட்டுள்ளது.
அனைத்து சாட்சியங்களும் இதை நிரூபிப்பதாக உள்ளன. ஆனாலும், காதலனின் தாய் மறுத்ததையே, காதலி தற்கொலை செய்யத் துாண்டியதாக கூறுவதை ஏற்க முடியாது. அவருக்கு மாற்று வாய்ப்புகள் இருந்துள்ளன. மேலும், தற்கொலை செய்த பெண்ணின் பெற்றோர் தான், இந்த காதலுக்கு பெரிதும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். காதலனின் தாய் மறுப்பு மட்டுமே தெரிவித்துள்ளார். காதலைத் தொடரக் கூடாது என்றோ, பார்க்கக் கூடாது என்றோ எந்த ஒரு நெருக்கடியும் அவர் கொடுக்கவில்லை. திருமணம் செய்யாவிட்டால், தற்கொலை செய்வதாக காதலி தான் மிரட்டியுள்ளார். அப்படியும் காதல் திருமணத்துக்கு காதலனின் தாய் ஏற்கவில்லை. அதையே, தற்கொலைக்கு துாண்டியதாக கூற முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது.