தேசிய விருது பெற்ற பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் இன்று அவரது இல்லத்தில் மரணம் அடைந்துள்ள செய்தி திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் இசை பாரம்பரியமிக்க குடும்பத்தில் நவம்பர் 30, 1945 ஆம் ஆண்டு பிறந்தவர் வாணி ஜெயராம் . இவரது இயற்பெயர் கலைவாணி என்பதாகும். 1971 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி படத்தின் மூலம் பின்னணி பாடகி ஆக சினிமா உலகில் அறிமுகமானார் இவர். நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடகியாக இருந்துள்ள இவர் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். சமீபத்தில் தான் திரையுலகில் தனது 50 ஆண்டுகால பயணத்தை பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னணி இசை அமைப்பாளர்களான எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஆர் டி பர்மன், கே பி மகாதேவன், கோபி நாயர் மற்றும் மதன் மோகன், ஆகியோருடன் இணைந்து இவர் பணியாற்றி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, ஒரியா, போஜ்புரி, உருது என இந்தியாவின் பெரும்பான்மையான பிராந்திய மொழி திரைப்படங்களிலும் பின்னணி பாடியுள்ளார் என்பது சிறப்பு.
பின்னணி பாடல்களுக்காக மூன்று முறை தேசிய விருதுகளையும் தமிழ்நாடு மகாராஷ்டிரா ஒரிசா ஆந்திர பிரதேஷ் மற்றும் குஜராத் ஆகிய மாநில அரசுகளிலிருந்தும் விருதுகளை பெற்றிருக்கிறார். சமீபத்தில் இவருக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கிய கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் இன்று வீட்டில் தவறி விழுந்த போது அவரது தலையில் பழுத்த காயம் ஏற்பட்டதால் மரணம் அடைந்துள்ளார். இவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து திரையுலகினரும் பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.