அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஓபிஎஸ் மற்றும் அவர் தொடர்புள்ள அனைவரையும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். எடப்பாடி பழனிச்சாமி. அந்த வகையில், அதிமுகவின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் அவர்களும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதற்கு நடுவே கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ரவீந்திரநாத் தன்னுடைய சொத்து மதிப்பை குறைத்து காட்டிருப்பதாகவும், அதனால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 2019 ஆம் வருடம் மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.
ஆனால் இதனை எதிர்த்து, ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. அத்துடன் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.