நொய்டாவில் கூகிள் மேப் உதவியுடன் பயணித்த ஸ்டேஷன் மாஸ்டரின் கார் 30 அடி ஆழமுள்ள வாய்க்காலில் விழுந்து அவர் உயிரிழந்தார். பீட்டா டூ காவல் நிலையப் பகுதியின் P3 செக்டார் அருகே இந்த சம்பவம் நடந்தது.
டெல்லியின் மண்டாவலியைச் சேர்ந்த ஸ்டேஷன் மாஸ்டர் பாரத் பாட்டி ஒரு திருமண விழாவிற்குச் சென்று கொண்டிருந்தார். கூகுள் மேப் உதவியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கேந்திரிய விஹார்-2 சொசைட்டிக்கு முன்னால் தனது காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது, எதிர்பாராத விதமாக அவரது கார் திடீரென வடிகாலில் விழுந்தது.
தகவல் கிடைத்தவுடன், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஸ்டேஷன் மாஸ்டரை வெளியே எடுக்க போலீசார் கடுமையாக முயற்சி செய்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் அவர் இறந்துவிட்டார். அவரிடம் இருந்த அடையாள அட்டையை வைத்து ஸ்டேஷன் மாஸ்டரை அடையாளம் கண்ட போலீசார், பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். சாலை மூடப்பட்டது குறித்து சாலை பயனர்களுக்கு எந்த அறிவிப்பு பலகையும் வைக்காததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, கூகிள் மேப்ஸ் ஓட்டுநர்களை சில சமயம் தவறாக வழிநடத்துகிறது, இது அவர்களை பாதுகாப்பற்ற பாதையில் அழைத்துச் சென்றது. நான்கு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் சில பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டேடகஞ்ச் காவல் நிலைய எஸ்.எச்.ஓ கௌரவ் பிஷ்னோய் உறுதிப்படுத்தினார். கூகிள் மேப்ஸின் பிராந்திய அதிகாரியும் விசாரணையில் உள்ளார், இருப்பினும் அவரது பெயர் இன்னும் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்படவில்லை.