இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரும் ஏற்றம் பெறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளன. அதாவது ஜூன் 4ம் தேதியான இன்று இந்தியாவின் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. இதில் ஒருவிதமான இழுபறி நிலவும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன.
மத்தியில் ஆட்சி அமைப்பது இழுபறியில் முடிய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் பங்குச்சந்தை இன்று படு மோசமாக சரிந்து உள்ளது. எக்ஸிட் போல் காரணமாக நேற்று பங்குச்சந்தை 2700 புள்ளிகளுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த நிலையில் இன்று 3200 புள்ளிகளுக்கும் அதிகமாக குறைந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 3260 புள்ளிகள் குறைந்து 73 ஆயிரத்து 216 என்ற புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 1010 புள்ளிகள் சரிந்து 22,210 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. ஹெச்யுஎல், பிரிட்டனியா, திவிஸ் லேப், நெஸ்லே, சன்பார்மா ஆகிய பங்குகளின் விலை உயர்ந்தும், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, பவர் கிரிட், ஓ என் ஜி சி ஆகிய பங்குகள் வீழ்ச்சி அடைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.