வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்திற்கான தயார் நிலை குறித்த தேசிய நெருக்கடி நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கெளபா தலைமையில் நடைபெற்றது.
வங்கக் கடலில் பங்களாதேஷின் கேப்புப்பாராவிற்கு தெற்கு- தென்மேற்கே 800 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் கேனிங் பகுதிக்கு தெற்கே 810 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் தற்போதைய நிலவரம் குறித்து இந்தக் கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத் தலைமை இயக்குநர் எடுத்துரைத்தார். இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து இன்று இரவு வாக்கில் புயல் சின்னமாக உருவாகக் கூடும்.
இதன் பின்னர் இந்தப் புயல் சின்னம் வடக்கு திசை நோக்கி நகர்ந்து, மே 26 வாக்கில் சாகர் தீவு மற்றும் கேப்புப்பாரா இடையே பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதியையொட்டி கரையைக் கடக்கக் கூடும். அன்று மாலை மணிக்கு 110 முதல் 130 கி.மீ. வரையிலான வேகத்துடன் காற்று வீசக்கூடும். மேற்கு வங்கத்தில் இதனை எதிர்கொள்வதற்கான தயாரிப்பு நடவடிக்கைகள் குறித்து அம்மாநில தலைமைச் செயலாளர் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் போதிய அளவு தங்குமிடங்கள், மின் விநியோகம், மருந்துப் பொருட்கள், அவசரகால சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.