அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஞானசேகரன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கைதான ஞானசேகரனை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல பாதிக்கப்பட்ட மாணவியின் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம் குறித்தும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் காவலர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், முதல் தகவல் அறிக்கை தயார் செய்த அபிராமிபுரம் காவல் நிலைய எழுத்தர் உட்பட 14 பேரை இந்த வழக்கில் விசாரணை வளையத்துக்குள் உள்ளனர்.
மேலும், அபிராமிபுரம் காவல் நிலைய ஆய்வாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் வைத்து காவல் ஆய்வாளரிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஞானசேகருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.