உசிலம்பட்டி நகர்மனறத் தலைவர், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர், தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் என 4 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை பதவிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவை 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இதன் விதிகளை மீறும் மேயர்கள், துணை மேயர்கள், மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மண்டலக்குழு தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது. இதன்படி விதிகளை மீறி செயல்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் 4 பேரின் பதவிகளை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 5-வது வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் (திமுக), 189-வது வார்டு கவுன்சிலர் வ.பாபு (திமுக), தாம்பரம் மாநகராட்சி 40-வது வார்டு கவுன்சிலர் மற்றும் 3-வது மண்டலக்குழு தலைவர் ச.ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி, 11-வது வார்டு கவுன்சிலர் மற்றும் நகர்மன்ற தலைவர் க.சகுந்தலா ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் பணிகள், மின் கேபிள் பதிப்பு போன்ற திட்டப் பணிகளை முறையாக மேற்பார்வையிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல்வேறு தரப்பில் இருந்து வருகிறது. பொதுமக்களின் புகார்களை அலட்சியப்படுத்துவதாகவும், கவுன்சிலர் என்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் சென்றன.
மேற்கூறிய பணிகளுக்கு கவுன்சிலர்கள் பணம் கேட்பதாகவும் அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால் அரசுக்கு ஏற்படும் அவப்பெயரை தடுக்கும் நோக்கிலும், கவுன்சிலர்களின அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும் பதவி பறிப்பு எனும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.