சில மாதங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற மோடி சமூகத்தினர் பற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறு பரப்பும் விதமாக பேசியது தொடர்பாக பாஜகவை சேர்ந்த ஒருவர் அந்த மாநிலத்தின் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அதை விசாரித்த நீதிமன்றம் ராகுல் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்ததோடு, அவருக்கு இரண்டு ஆண்டு கால சிறை தண்டனை விதித்தது. இதனால் அவருடைய எம்.பி. பதவி பறிபோனது. ஆகவே இதனை எதிர்த்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.
ஆனால் இந்த வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராகுல் காந்தி, விசாரணைக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில், அவருடைய மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2️ வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டதை நிறுத்தி வைத்து தீர்ப்பு வழங்கியது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராகுல் காந்தி தன்னுடைய வலைதளப்பதிவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், என்ன நடந்தாலும், என்றுமே என்னுடைய கடமை மாறாது. இந்தியா என்ற எண்ணத்தை பாதுகாப்போம் என்று கூறி இருக்கிறார்.
அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி அன்பும், ஆதரவும் வழங்கிய மக்களுக்கு நன்றி. எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில், உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி எனவும் தன்னுடைய கடமை என்ன என்பதில் தான் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் எதுவாக இருந்தாலும், உண்மை வெல்லும் என்றும் என்னுடைய பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.