மது போதைக்கு அடிமையானவர்களை போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்களில் சேர்த்து விடுகின்றனர். ஆனால், பல போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் கொலை செய்யும் மையங்களாகவே இயங்கி வருகின்றன. அடித்து உதைத்து சித்திரவதைகளை செய்து பலரை கொலை செய்து விட்டார்கள். இதனால் போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் என்றாலே கொலை செய்யப்படும் இடமாகவே அதிர்ச்சியைத் தருகின்றன. அப்படித்தான் குஜராத் மாநிலத்தில் மேசானா மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்திக் சுதார் என்கிற வாலிபரை படான் மாவட்டத்தில் உள்ள ஜியோனா போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபர், கடந்த 17ஆம் தேதி அன்று கழிவறைக்குச் சென்ற போது தனது மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த மையத்தின் மேலாளர், இவரை கொடூரமாக அடித்து தாக்க உத்தரவிட்டிருக்கிறார் . அதை பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டும் என்று அப்படி செய்யச் சொல்லி இருக்கிறார். இதையடுத்து, 7 பேர் சேர்ந்து அந்த வாலிபரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர். வெறும் 5 நிமிடமோ 10 நிமிடமோ அல்ல. சுமார் 2 மணிநேரமாக கொடூரமாக தாக்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பைப்பை தீயில் போட்டு உருக்கி அதை அந்த வாலிபரின் அந்தரங்க பகுதியில் ஊற்றியுள்ளனர்.
வேறு யாராவது இது மாதிரி செஞ்சா இப்படித்தான் தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்து இருக்கிறார்கள். 2 மணி நேரம் நடந்த இந்த கொடூர தாக்குதலில் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 7 பேரை கைது செய்துள்ளது. தலைமறைவாக இருக்கும் அந்த சிகிச்சை மையத்தின் மேலாளர் சந்தீப் பட்டேலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.