சேலம் அருகே அக்கா தம்பி இருவரையும் அவரது சித்தப்பாவே கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (40), இவரது மனைவி சித்ரா (38). இவர்களுக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் நவீனா என்ற மகளும், 9 ஆம் வகுப்பு படிக்கும் சுகன் என்ற மகனும் இருந்தனர். நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நவீனாவும் , தம்பி சுகனும் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர்.
சிறிது நேரத்தில் தோட்டத்தில் இருந்து அவர்களது அலறல் சத்தம் கேட்டது. இதனை கேட்டு அவர்களது தந்தை ராஜா, வேகமாக தோட்டத்திற்கு சென்றார். பூச்செடிகளுக்கிடையே பார்த்தபோது, மகள் நவீனாவும், மகன் சுகனும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை கதறி அழுதார். ராஜாவின் அலறல் சத்தம் கேட்டு , மனைவி சித்ராவும், அக்கம் பக்கத்தில் வசிப்போரும் தோட்டத்திற்கு வந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இறந்து கிடந்த அக்கா நவீனா, தம்பி சுகன் ஆகியோரது உடலை மீட்டு, பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து எஸ்பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ராஜாவிற்கும், பக்கத்தில் விவசாய நிலம் வைத்துள்ள சித்தப்பா மகனான தம்பி தனசேகரனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாகவும், அதனால் ராஜாவை பழிவாங்க அவரது இரு குழந்தைகளையும் கழுத்தறுத்து கொன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த இரட்டைக்கொலை பற்றி பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான தனசேகரனை பிடிக்க மாவட்ட எஸ்பி கௌதம்கோயல், தனிப்படைகளை அமைத்துள்ளார். தனிப்படை போலீசார், தனசேகரனை தீவிரமாக தேடி வருகின்றனர். 14 வயது தம்பியுடன் பிளஸ்-2 மாணவியை அவரது சித்தப்பாவே கழுத்தறுத்து படுகொலை செய்த இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more ; வயநாடு மக்களவை தொகுதிக்கு நவ.13 இடைத்தேர்தல்..!! – தலைமைத் தேர்தல் ஆணையர்