தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், வாசித்தல் பயிற்சி மற்றும் அடிப்படை கணக்குகளை 100 நாட்களில் ஓபன் சேலஞ்ச் என பொதுவெளியில் அறிவித்து அதனை செயல்படுத்த வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஏசர் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், தமிழக மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடத்தை கூட வாசிக்க தெரியாதவர்களாக உள்ளனர்.
கிராமப்புற பகுதிகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவர்களில் 64 சதவீதம், 5 ஆம் வகுப்பு படிக்கும் 35 சதவீதம் பேரும் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை கூட படிக்க முடியாமல் இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்தது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், வாசித்தல் பயிற்சி மற்றும் அடிப்படை கணக்குகளை 100 நாட்களில் ஓபன் சேலஞ்ச் என பொதுவெளியில் அறிவித்துள்ளது.
இந்த கடிதத்தில் மொத்தம் 4,552 அரசு பள்ளிகள் கற்பித்தல் வெளிப்படை சவாலுக்கு தயாராகும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் வாசித்தல், அடிப்படை கணக்கு திறன்களில் வெளிப்படை சவால்களை சமாளிக்கும் வகையில் மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.
இதற்காக கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 100 நாட்களில் மாணவர்களின் அடிப்படை கல்வித் திறனை மேம்படுத்த செயலாற்ற வேண்டும். தற்போதைய நிலவரப்படி கிருஷ்ணகிரி, ஆனேகொள்ளு, டி.புதூர் தொடக்கப் பள்ளியில் 23 மாணவர்களும் கற்றலில் சிறப்பாக உள்ளனர்.
முன்னதாக தலைமை ஆசிரியர் விடுத்த அழைப்பை ஏற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கற்றல் திறனை நேரில் வந்து ஆய்வு செய்தார். சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் மாணவர்களின் கற்றல் திறன் தொடர்பாக அரசு பள்ளிகள் சவால் விட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டார்.
தமிழக அரசு ஏன் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மறுக்கிறது? என்று மத்திய பாஜக அரசு கேள்வி எழுப்பி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் இருமொழி கொள்கை மூலமே சாதனைகள் படைத்து வருகிறோம் என்று தமிழக அரசு பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளது.