டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது. அதில், டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது, கொள்முதலை குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் மதுபான நிறுவனங்களிடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாகவும், டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, அமலாக்கத் துறையின் ஈ.சி.ஐ.ஆர் எனும் வழக்கு தகவல் பதிவேட்டின் அசல் நகலை வழங்க, அமலாக்கத் துறைக்கு இடைக்காலமாக உத்தரவிட வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ, ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மனுவை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மார்ச் 25 வரை நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது.