fbpx

தமிழகத்தில் அரசு காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சம் ஆக அதிகரிப்பு….!

தமிழ்நாட்டில் அரசுப் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சம் ஆக அதிகரித்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை  6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. மு,க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதற்கு இதை விட  பெரிய சான்று எதுவும் தேவையில்லை. அரசுப் பணியிடங்களை நிரப்ப திமுக அரசு தவறியது கண்டிக்கத்தக்கது.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட  தேர்தல் அறிக்கையில் தமிழக அரசுத் துறைகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும்,  அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மேலும் 2 லட்சம் பணியிடங்களை புதிதாக உருவாக்கி அவற்றையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி  அளிக்கப்பட்டிருந்தது.  ஆனால், அந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதுடன், கடந்த நான்காண்டுகளில் கூடுதலாக ஏற்பட்ட மூன்று லட்சம் காலியிடங்களையும் திமுக அரசு நிரப்பவில்லை என்பதைத் தான் அரசு ஊழியர் அமைப்புகள் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக கடந்த  நான்காண்டுகளில்  34,384 பேருக்கு மட்டும் தான் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.   தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் 1.30 கோடி பேர் அரசு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நிலையில் ஆண்டுக்கு பத்தாயிரம் பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்குவது  இளைய தலைமுறையினருக்கு இழைக்கப்படும்  பெரும் துரோகமாகும்.

அரசு பணியிடங்களை நிரப்புவதை மனிதவளத்தை பயன்படுத்துவதாக மட்டும் பார்க்க முடியாது.  படித்த ஓர் இளைஞருக்கு அரசு வேலை வழங்குவதன் மூலம் ஓர் குடும்பம் வறுமையிலிருந்து மீட்கப்படுகிறது.  அதன்படி பார்த்தால் ஆறரை லட்சம் அரசு பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதன் மூலம்  ஆறரை லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்கும் கடமையைச் செய்ய தமிழக அரசு தவறி விட்டது.

அரசுப் பணியிடங்களை நிரப்பாததன் மூலம் சமூகநீதிக்கும் பெரும் துரோகத்தை திமுக அரசு இழைத்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை என்பது மட்டுமின்றி, எல்லா பணியிடங்களிலும்  ஒப்பந்த முறையிலும், குத்தகை அடிப்படையிலும் தான்  பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை.  அதனால், தமிழ்நாட்டில்  69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது என்று பெருமிதம்  கொள்வதில்லை எந்த அர்த்தமும் இல்லை.

மூச்சுக்கு முன்னூறு முறை சமூக நீதி என்று பெருமை பேசிக் கொள்ளும் மு.க.ஸ்டாலினுக்கு உண்மையாகவே சமூகநீதியிலும், இளைஞர் நலனிலும் அக்கறை இருந்தால்,  தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6.50 லட்சம் காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

English Summary

The number of government vacancies in Tamil Nadu has increased to 6.50 lakhs.

Vignesh

Next Post

விஜய் கட்சியில் இணையும் ஆதவ் அர்ஜுனா..!! பரபரக்கும் அரசியல் களம்..!! பக்கா பிளான்..!! 2026இல் அது உறுதியாம்..!!

Thu Jan 30 , 2025
It has been reported that Adhav Arjuna will act as the election advisor for Vijay's Tamil Nadu Victory Party.

You May Like