அமலாக்கத்துறையின் சோதனையின் போது தாங்கள் நடத்தப்பட்ட விதம் சட்டவிரோதமானது மட்டுமின்றி, மனிதத்தன்மை அற்ற செயல் என டாஸ்மாக் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், டாஸ்மாக் செயலாளர் மற்றும் டாஸ்மாக் தலைமை கணக்கு அதிகாரி ஆகியோர் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர். அதில், அமலாக்கத்துறை சோதனையின் போது தாங்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கபட்டிருந்ததாகவும் உடல் நல ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. காலையில் பணிக்கு வந்த தங்களை நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பியதோடு மறுநாள் விரைவாக தங்களிடம் கூறியதாகவும் இதன் காரணமாக மூன்று நாட்களும் தூக்கிமின்றி பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
மேலும், பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் தங்களை நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பியதாகவும் பிரமாண பத்திரத்தில் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செல்போன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதால் குடும்பத்தினருக்கு கூட தகவல் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மட்டுமன்றி மனிதாபிமானமற்ற நடவடிக்கை எனவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனை நடத்தியது தொடர்பாக மூன்று நாட்கள் பதிவான சிசிடிவி காட்சிகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.