மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது இதயமாகும். இதயத்தின் செயல்பாடு சிறப்பாக இருந்தால்தான் மற்ற உறுப்புகளும் சிறப்பாக செயல்பட முடியும். ஏனெனில் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ரத்தம் இதயத்தின் மூலமாகவே அனுப்பப்படுகிறது. இந்த இதயத்தின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. பொதுவாக குளிர்காலங்களில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும் போது உடலின் வெப்பநிலையிலும் மாற்றம் ஏற்படுவதால் இது இதயத்தை பாதிக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பு ஏற்படுவதற்கான பல்வேறு அறிகுறிகள் இருந்தாலும் சில அறிகுறிகள் நமது கண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நம் கண்களில் ஏற்படும் சில அறிகுறிகள் கூட மாரடைப்பு ஏற்படுவதை நமக்கு உணர்த்தலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான அறிகுறிகள் எவை என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். கண் பார்வையில் திடீரென மங்கலாக இருந்தால் மாரடைப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் . ஏனெனில் இதயத்தின் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பின் காரணமாக கண்களுக்குச் செல்லும் ரத்தம் தடைபடுவதால் கண்பார்வை மங்கலாகலாம். எனவே கண் பார்வை மங்கல் பிரச்சனை இருந்து நெஞ்சு பகுதி மற்றும் கைகளில் வலியை உணர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரை சென்று பாருங்கள்.
கண்கள் சிவப்பாக இருப்பது பொதுவாக தூக்கமின்மை காரணமாக சொல்லப்படுகிறது. எனினும் கண்கள் சிவந்து இருந்தால் அதுவும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்போது கண்கள் சிவப்பாகும். உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கண்கள் சிவந்து இருந்தால் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். மேலும் நமது கண்களின் கருவிழிகள் எப்போதும் சமமாகவே இருக்கும். அவற்றில் ஒரு கருவிழி சிறியதாகவும் மற்றொன்று பெரியதாகவும் இருப்பது போல் தோன்றினால் மாரடைப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இது போன்ற அறிகுறிகள் கண்களில் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உண்மையான சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியம்.