வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை தெரிவிக்க புகார் எண் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுப்பணித்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் மழைநீர் செல்ல கூடிய கால்வாய்களை தூர் எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். ஏரி. குளம், வரத்து வாய்க்கால்கள், நீர் நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட வேண்டும். மழை நீர் கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேற்றும் அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் துறையினர் தங்கள் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
உணவு வழங்கல் துறை அலுவலர்கள் மழைக்காலங்களில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகள் என்று கண்டறியப்பட்ட பகுதிகளுக்கான குடிமைப்பொருட்களை சம்மந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பான இடங்களில் சேகரித்து வைக்க வேண்டும். சுகாதாரத்துறையினர் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நடமாடும் மருத்துவக்குழுவினர் மற்றும் அவசர ஊர்தி வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தற்போது காய்ச்சல் முகாம்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான சித்த மருத்துவ நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தன்னார்வத்துடன் பணியாற்ற வேண்டும். பேரிடர் மேலாண்மை குழுக்களில் இடம் பெற்றுள்ள அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று முதன்மை பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஜெனரேட்டர். பம்புசெட்டு, படகுகள், மரங்களை அறுக்கும் இயந்திர ரம்பங்கள், தேவையான லைட்டுகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 மூலம் தெரிவிக்கலாம். பொதுமக்கள் TNSMART என்ற செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து மழைகுறித்த பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்