திமுகவின் மூத்த தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் வீட்டில் இன்று கா சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் திருச்சி சிவா. இவர் திருச்சி தொகுதியை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இவரது வீடு திருச்சியில் அமைந்திருக்கிறது. இன்று காலை இவரது வீட்டிற்குள் புகுந்த சில மர்ம நபர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். மேலும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கையும் உடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் இவரது வீட்டுக்கு அருகில் அரசு விளையாட்டு மைதானம் ஒன்று திறக்கப்பட்டது. அதனை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார். அந்த மைதானத்தின் கல்வெட்டில் திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே என் நேருவின் காரை மறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மேலும் அவருக்கு கருப்பு கொடியும் காட்டியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கே என் நேருவின் ஆதரவாளர்கள் என சொல்லிக் கொள்ளும் சிலர் திருச்சி சிவாவின் வீட்டில் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைக்காக திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது காவல் நிலையத்திற்கு வந்த அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல்துறையின் கண் முன்னே தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவிற்குள் ஏற்பட்ட இந்த கோஷ்டி கலவரத்தால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது .