திருச்சியில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டி செல்வோரை இரும்பு கம்பியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மூன்று இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. திருச்சியில் காட்டூர் கணேஷ் நகர், ரோஜா தெரு பகுதியைச் சார்ந்தவர் உதயன் வயது 37. இவர் முன்தினம் இரவு 12 மணி அளவில் கொண்டையம் பேட்டை பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த இளைஞர் ஒருவர் இவரை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். நிலை தடுமாறி கீழே விழுந்த உதயனை அவருடன் வந்திருந்த இரண்டு நபர்கள் அருகில் இருந்த புதருக்குள் இழுத்துச் சென்று கத்தியால் குத்தி அவரை மயக்கம் அடைய செய்துள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணம், ஒரு லேப்டாப் மற்றும் இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உதயனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக உடனே தீவிரமான தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் மூன்று பேர் கையில் இரும்பு கம்பிகளுடன் நடமாடுவதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக மாநகர காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அந்த கும்பலை சார்ந்த ஒருவர் ஓயாமரி பகுதியில் உள்ள காவிரி கரையில் காவல்துறையினரிடம் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் கும்பகுடியைச் சார்ந்த கும்பக்குடி வசந்த்(23) என்ற ரவுடி என்பது தெரிய வந்தது. இவர் தனது நண்பர்களான திம்மராய சமுத்திரத்தைச் சார்ந்த விக்கி என்ற விக்னேஷ்(23) மற்றும் சந்தோஷ் குமார் என்ற மொட்டை சந்தோஷ் (22) ஆகியோருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து உதயம் கொடுத்த புகாரின் பேரில் வசந்த் விக்னேஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து செல்போன், லேப்டாப், பணம் மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கும்பங்குடி வசந்தின் தந்தை திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்திய ப்ரியா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.